முக்கிய செய்திகள்:
பாதுகாப்பை ஏற்க மறுத்த கெஜ்ரிவால்

காசியாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் மீது கும்பல் இன்று தாக்குதல் நடத்தியது. கெஜ்ரிவால் வீட்டின் அருகே உள்ள இந்த அலுவலகத்திற்கு காலை 11 மணியளவில் வந்த சுமார் 50 பேர், கற்களை வீசி தாக்கியதுடன், அலுவலக ஜன்னலை அடித்து உடைத்தனர். அங்குள்ள ஊழியர்களையும் தாக்க முற்பட்டதாகவும், பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர்கள், 'இந்து ரக்சா தள்' கொடியை ஏந்தி வந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பா.ஜனதா கட்சியும், அதன் சார்பு அமைப்புகளும் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிரசாந்த் பூஷன் கடும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "2011-ம் ஆண்டு தனது வீட்டில் தாக்குதல் நடத்திய கும்பல்தான் இன்று தாக்குதல் நடத்தியது. தேசிய கட்சி என்று அழைக்கப்படும் பா.ஜனதா கட்சி, குண்டர்களை ஆம் ஆத்மிக்கு எதிராக கட்டவிழ்த்து விடத் தொடங்கியிருக்கிறது.

ஆம் ஆத்மியின் வளர்ச்சியால் பா.ஜனதாவும் அதனை சார்ந்த சங்பரிவார அமைப்புகளும் ஆத்திரம் அடைந்துள்ளன. மிகப்பெரிய அரசியல் கட்சி இதுபோன்று வன்முறையில் இறங்குவது துரதிர்ஷ்டவசமானது. இது அவர்களின் பாசிச மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது" என்றார்.

ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கான பாதுகாப்பை ஏற்க மறுத்த கெஜ்ரிவாலிடம், இந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு தனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி காசியாபாத் காவல்துறை வலியுறுத்தியது. ஆனால், இதனை ஏற்க மறுத்த கெஜ்ரிவால் தனக்கோ, தனது அலுவலகத்திற்கோ பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிவிட்டார்.

 

மேலும் செய்திகள்