முக்கிய செய்திகள்:
ஊழலை ஒழிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல:மன்மோகன்சிங்

டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன் சிங் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது,அடுத்த பிரதமரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்துதான் வருவார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நரேந்திர மோடி இந்த நாட்டுக்கு பிரதமராக வந்தால், அது பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்.

ஆமதாபாத்தில் தெருக்களில் நடந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை வைத்து நீங்கள் பிரதமர் பலத்தை அளவிட்டால் அதை நான் ஏற்க தயாராக இல்லை. அதை நான் நம்ப மாட்டேன்.ஊழல் மிக முக்கியமான பிரச்சினை. ஊழலை வேரறுக்க வேண்டும் என்பதில் ஆம் ஆத்மி கட்சி முதல்கட்ட வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் ஊழலை ஒழிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.டெல்லியில் 1984–ம் ஆண்டு சீக்கிய மக்களுக்கு எதிராக நடந்த சம்பவம் போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடக்கக் கூடாது. அந்த சம்பவத்துக்காக அரசின் சார்பில் நான் சீக்கிய சமுதாய மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை. அது பற்றி நான் இன்னும் சிந்திக்கவில்லை.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை 9–ல் இருந்து அதிகரிப்பது பற்றி இன்னும் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.ஊழலை ஒழிக்க இன்னும் 6 மசோதா கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான சூழ்நிலையை நாங்கள் உருவாக்குவோம்.

கடந்த 2 தடவை பிரதமர் பொறுப்பை ஏற்று கூட்டணி அரசை திறம்பட நடத்தி உள்ளேன். வெளிநாட்டு விஷயங்களில் நாங்கள் சமரசமாகி இருந்தாலும் தேசிய பிரச்சினைகளில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை.பாராளுமன்ற தேர்தலுக்கு கால அவகாசம் உள்ளதால் அதற்குள் பொருளாதாரத்தை சீரமைத்து விட எங்களுக்கு வாய்ப்பு உள்ளது. நாங்கள் அமைதியாக இருந்து நிறைய நல்ல விஷயங்களை செய்துள்ளோம்.

அமெரிக்காவில் உள்ள இந்தியர் தூதர் தேவயானிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத் துவம் ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று கூறுவது தவறு. அந்த பிரச்சினையில் நாங்கள் முழுமையான கவனம் செலுத்தி வருகிறோம்.

இலங்கை அரசுடன் பலதடவை பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கிறோம். வடக்கு மாகாண மக்களுக்கு சமஉரிமை கொடுக்க தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம்.இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர் ஆட்சி ஏற்பட்டுள்ளது. அங்கு மேலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது அடிக்கடி பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளும் அமர்ந்து பேசினால்தான் சுமூக தீர்வு காணமுடியும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

 

மேலும் செய்திகள்