முக்கிய செய்திகள்:
மத்திய மந்திரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

ஓரினச் சேர்க்கையாளர்கள் சம்மதத்துடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது குற்றச்செயல் அல்ல என்று டெல்லி ஐகோர்ட்டு கூறிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி ரத்து செய்தது.

இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம். இதற்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டு இருப்பது செல்லும் என்று தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் கருத்து தெரிவித்தார். நிருபர்களிடம் அவர் கூறும்போது,

‘‘இந்த விவகாரம் தனி நபர் சுதந்திரம் என்று நான் உணர்கிறேன். நான் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவினை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த பிரச்சினைகளை தனிநபர் விருப்பத்திற்கே விட்டு விட வேண்டும்.’’ என்றார்.

இதே பாணியில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை விமர்சிக்கும் முறையிலும், எதிர்க்கும் வகையிலும் மத்திய மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் சிலரும் மாறுபாடான கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

இதற்கு சுப்ரீம் கோர்ட் வருத்தமும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட சுப்ரீம் கோர்ட், ‘ ஓரினச் சேர்க்கை தொடர்பாக இந்த கோர்ட் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து மத்திய மந்திரிகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவும், அனுமதிக்க கூடிய வகையிலும் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு கருத்து கூறிய மந்திரிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. எனினும், உயர்ந்த பதவிகளை வகிப்பவர்கள் இதுபோன்ற விமர்சனங்களை தெரிவிக்கும் போது சற்று யோசிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.

 

மேலும் செய்திகள்