முக்கிய செய்திகள்:
புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார்

பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டம் முல்லான்பூரில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் கட்டுவதற்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று அடிக்கல் நாட்டினார்.விழாவில் அவர் பேசியதாவது,

உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் போன்ற அச்சுறுத்தும் நோய்களை கட்டுப்படுத்த உலகத்தரத்திலான, நியாயமான கட்டணத்தில் மருத்துவ வசதிகளை வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக நலிவடைந்த மக்களுக்கு நியாயமான விலையில் சுகாதார வசதிகளை அளிக்க விரும்புகிறது.

மும்பை டாடா நினைவு மருத்துவமனை போன்று இங்கு ரூ.450 கோடியில் அமைய உள்ள இந்த புற்றுநோய் மருத்துவமனையின் பணிகள் 4 ஆண்டுகளில் முடிவடையும்.புற்றுநோய்க்கு எதிரான ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மேற்கொள்வதற்காக தேசிய புற்றுநோய் மையத்தை அரசு உருவாக்கி வருகிறது. இந்த மையமானது, மண்டல மற்றும் பிராந்தியங்களில் உள்ள புற்றுநோய் மையங்களுடன் இணைக்கப்படும்.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் 27 பிராந்திய புற்றுநோய் மையங்கள் வரும். இதுதவிர மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பிராந்திய புற்றுநோய் மையங்களில் புற்றுநோயியல் துறை உருவாக்கப்பட்டுள்ளன.

புற்றுநோயால் இறக்கும் நபர்களை கணக்கெடுத்து பார்த்தால் 70 சதவீதம் பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 11 லட்சம் புதிய நோயாளிகள் பதிவு செய்யப்படுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 9 லட்சம் மகக்ள் இந்த நோயால் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

 

மேலும் செய்திகள்