முக்கிய செய்திகள்:
பிரதமர் பதவியில் நீடிக்க மாட்டேன்:மன்மோகன்சிங்

ராகுலுக்கு வழிகாட்டுவேன், பிரதமர் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

காங்கிரசில் சோனியாவுக்குப் பின் ராகுல் காந்திக்கு துணைத் தலைவர் பதவி அளித்து முன்னிலைப் படுத்தப்பட்டு வருகிறார். பாரதீய ஜனதா போல் நாமும் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஜனவரி மாதம் 17–ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இதில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் சிலர் வற்புறுத்தி வருகிறார்கள்.

இதற்காக கூட்டத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளனர். இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக மூத்த தலைவர்களின் கையெழுத்து திரட்டப்பட்டு வருகிறது.

காங்கிரசில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை சரியாக நேரத்தில் அறிவிப்போம் என்று சோனியாகாந்தி கூறியிருந்தார். எனவே இந்த செயற்குழு கூட்டத்தில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.

ராகுல்காந்திக்கு வழிவிடும் வகையில் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் பிரதமர் ஆக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் சோனியாகாந்தியும், மன் மோகன்சிங்கும் பங்கேற்றனர். அப்போது காங்கிரஸ் வெற்றி பெற்று 3–வது முறையாக ஆட்சியைப் பிடித்தால் நான் பிரதமர் ஆக மாட்டேன். எனக்கு பிரதமர் பதவி வேண்டாம் என்று உறுதிபட தெரிவித்து விட்டதாக கூறினார்.

10 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடித்து விட்டேன். எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

என்றாலும் கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்துவேன். ராகுல் காந்திக்கு வழிகாட்டியாக செயல்படுவேன் என்றும் மன்மோகன்சிங் தனது விருப்பத்தை சோனியாவிடம் தெரிவித்து விட்டார். இதனால்தான் காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவுக்கு வந்து இருக்கிறது.

 

மேலும் செய்திகள்