முக்கிய செய்திகள்:
மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது, காங்கிரஸ் முன்னாள் எம்.பி.எசான் ஜாப்ரி உட்பட 68 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் முதல் நரேந்திர மோடி உள்ளிட்ட 58 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக்குழு, போதிய ஆதாரம் இல்லாததால், அனைவரும் குற்றமற்றவர்கள் என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்தது.

இதனை எதிர்த்து எசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி அகமதாபாத் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். அதில் மோடி மீது குற்றம் சாட்டியிருந்த அவர், மீண்டும் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, நரேந்திர மோடி குற்றமற்றவர் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், ஜாகியா ஜாப்ரியின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால், நரேந்திர மோடிக்கு இருந்த நெருக்கடி நீங்கியுள்ளது.

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு எதிரான வழக்கு என்பதால் கோர்ட் வளாகத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டனர். ஜாகியா ஷப்ரியும் கோர்டுக்கு வந்திருந்தார். ஆனால் மோடிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதால் அவர் அதிருப்தி அடைந்தார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்