முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் முதலமைச்சர்களுடன் ராகுல்காந்தி அவசர ஆலோசனை

ஜனவரி மாதம் 17–ந்தேதி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வியூகம் பற்றியும், வேட்பாளர்கள் தேர்வு பற்றியும் கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்துகிறார்.இதே போல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தேர்தல் ஆலோசனை களத்தில் குதித்துள்ளார். கோஷ்டி பூசலை ஒழித்து கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதற்கான பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

இதில் ஒரு கட்டமாக காங்கிரஸ் முதல்–மந்திரிகள் கூட்டத்தை ராகுல்காந்தி கூட்டியுள்ளார். வருகிற 27–ந்தேதி டெல்லியில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.கூட்டத்துக்கு ராகுல்காந்தி தலைமை தாங்கி காங்கிரஸ் முதல்–மந்திரிகளுக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கிறார்.ராகுல்காந்தி காங்கிரஸ் துணைத் தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக நடைபெறும் முதல்–மந்திரிகள் கூட்டம் இதுவாகும்.

காங்கிரஸ் முதல்–மந்திரிகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த மத்திய மந்திரிகளும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள்.தற்போது ஆந்திரா, கர்நாடகம், கேரளா, மராட்டியம், அரியானா, இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், சிக்கிம், அசாம், மணிப்பூர், மேகாலயா, உத்தரகாண்ட் ஆகிய 13 மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இதில் ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், தவிர மற்ற 10 மாநிலங்களும் சிறிய மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை தக்க வைத்துக் கொள்வது பற்றியும், கூடுதல் இடங்களில் வெற்றி வாய்ப்பு பற்றியும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
முதல்–மந்திரிகள் கூட்டத்தில் அவர்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலும், வேகப்படுத்தும் வகையிலும் ஆலோசனைகள் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்