முக்கிய செய்திகள்:
பாலியல் தொழிலாளிகளுக்கு இலவச காப்பகங்கள்:மேற்கு வங்க அரசின் புதுமை திட்டம்

 

கொல்கத்தாவின் சோனாகச்சியில் உள்ள பிரபல சிகப்பு விளக்கு பகுதி ஆசியா கண்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெரிய விபச்சார சந்தையாக கருதப்படுகிறது.வறுமையாலும், குடும்ப சூழ்நிலையாலும் இங்குள்ள விபச்சார தரகர்களிடம் சிக்கும் பெண்கள், நீண்ட காலம் சோனாகச்சி விபச்சார விடுதிகளில் தங்கி தங்களின் வாழ்நாளின் பெரும்பகுதியை கழிக்கின்றனர். வயதாகி, முதுமை ஏற்பட்டு, அழகும் உடல்கட்டும் பறிபோன நிலையில், சாறு பிழியப்பட்ட கரும்பின் சக்கைகளாக இந்த பெண்கள் விடுதிகளில் இருந்து வெளியே விரட்டப்படுகின்றனர்.

சாப்பிடுவதற்கு போதுமான உணவு கிடைக்காமலும், எய்ட்ஸ் போன்ற தீராத பெருநோய்களால் பாதிக்கப்பட்ட நிலையிலும் வழிப்போக்கர்களிடம் பிச்சை எடுத்து தின்று, தெருவின் ஓரங்களில் உறங்கி தங்களின் ஆயுளின் எஞ்சிய நாட்களை கடத்தும் இந்த முன்னாள் பாலியல் தொழிலாளிகளில் பெரும்பாலானவர்கள் அனாதைப் பிணங்களாகவே செத்துப் போகவும் நேரிடுகிறது.

இவர்களைப் போன்ற வயதான முன்னாள் பாலியல் தொழிலாளிகளின் நல்வாழ்வுக்கு மாநில அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என பல்வேறு சமூகத் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தன.இதனையொட்டி, மாநில அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின் படி, வயதான மற்றும் நோய்வாய்பட்ட சுமார் 750 முன்னாள் பாலியல் தொழிலாளிகள், கொல்கத்தா நகர வீதிகளில் அனாதைகளாக வாடிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள மாநில அரசு, இவர்களுக்கு உணவு, மருத்துவத்துடன் கூடிய இலவச காப்பகங்கள் அமைக்கும் திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது.'இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 2 புதிய விடுதிகள் கட்டப்பட்டு, அவற்றில் 200 பெண்கள் தங்க வைத்து பராமரிக்கப்படுவார்கள்' என மேற்கு வங்காள மாநில அரசு அறிவித்துள்ளது.

 

மேலும் செய்திகள்