முக்கிய செய்திகள்:
முதல்– மந்திரியாக கெஜ்ரிவால்: பொதுமக்கள் முன்னிலையில் பதவி ஏற்கிறார்

டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா 32 தொகுதியிலும், ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதியிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களே கிடைத்தன. மெஜாரிட்டி பலத்துக்கு 36 இடங்கள் தேவை. இதனால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை.இதையடுத்து மாநில கவர்னர் நஜிப் முறைப்படி பாரதீய ஜனதாவுக்கு அழைப்பு விடுத்தார். அந்த கட்சி ஆட்சி அமைக்க மறுத்ததால் 2–வது இடம் பிடித்த ஆம் ஆத்மியை அழைத்தார். அந்த கட்சி ஆட்சி அமைக்க காங்கிரசும், பாரதீய ஜனதாவும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தாமாகவே முன்வந்து அறிவிப்பு வெளியிட்டன.

கவர்னரை சந்தித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 10 நாள் அவகாசம் கேட்டார். காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆதரவை ஏற்க அந்த கட்சிகளுக்கு நிபந்தனையும் விதித்தார்.அதன்பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சி நிர்வாகிகளிடமும், எம்.எல்.ஏ.க்களிடமும் கருத்து கேட்டார். கடைசியாக டெல்லி வாக்காளர்களிடமும் இணையதளம் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் கருத்து கேட்டார். இதில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று விரும்புவதாக பெரும் பாலானவர்கள் கூறி இருந்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் கருத்தை ஏற்க அரவிந்த் கெஜ்ரிவால் முன்வந்துள்ளார். மீண்டும் தேர்தலை சந்தித்தால் அது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். நாளை (திங்கட்கிழமை) இதுபற்றி அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுகிறார்.இதற்கிடையே கெஜ்ரிவால் வருகிற 25–ந்தேதி (புதன்கிழமை) டெல்லி முதல்–மந்திரியாக பதவி ஏற்க ஏற்பாடுகள் நடக்கிறது. டெல்லி ஜந்தர் மந்தர் அல்லது ராம்லீலா மைதானம் இதில் ஏதாவது ஒன்றில் பதவி ஏற்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரு இடங்களில்தான் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். எனவே இதில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து பொதுமக்கள் மத்தியில் பதவி ஏற்க திட்டமிட்டுள்ளார்.இதுவரை டெல்லியில் அனைத்து முதல்– மந்திரிகளும் ராஜ்பவனில்தான் பதவி ஏற்றுள்ளனர். தற்போது முதல் முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பொது இடத்தில் வைத்து முதல்– மந்திரியாக பதவி ஏற்கிறார்.

 

மேலும் செய்திகள்