முக்கிய செய்திகள்:
ஜெயந்தி நடராஜன் திடீர் ராஜினாமா

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ் கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.காங்கிரசும், பா.ஜ.க.வும் நேருக்கு நேராக களத்தில் குதித்த இந்த 5 மாநில தேர்தல் அடுத்த ஆண்டு (2014) ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமான அரை இறுதி போட்டி போல கருதப்பட்டது.

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், துணைத் தலைவர் ராகுல்காந்திக்கும் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. குறிப்பாக டெல்லியில் ஏற்பட்ட தோல்வியால் மிகவும் அதிருப்தி அடைந்த ராகுல் பாராளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.ஆம் ஆத்மி கட்சி மூலம் சாதாரண மக்களிடம் நெருங்கி செல்ல வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டதாக கூறிய ராகுல்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்களை மந்திரி பதவிகளில் இருந்து விலகச் செய்து தீவிர கட்சிப் பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்தார். அவரது திட்டப்படி காங்கிரஸ் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் தொடங்கியுள்ளன.இந்நிலையில் ராகுல் திட்டத்துக்காக உதவ முதல் நபராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் முன் வந்தார். அவர் மத்திய மந்திரி சபையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரியாக இருந்தார்.

இன்று (சனிக்கிழமை) அவர் திடீரென மத்திய மந்திரி பதவியில் இருந்து விலகினார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் தன் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதை அவர் ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடனடியாக ஜெயந்தி நடராஜனின் விலகலுக்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டார். இதையடுத்து ஜெயந்தி நடராஜனின் ராஜினாமாவை ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியிட்டனர்.

ஜெயந்தி நடராஜன் வகித்து வந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.ஜெயந்தி நடராஜனை தொடர்ந்து மேலும் சில மத்திய மந்திரிகளும் பாராளுமன்ற தேர்தல் பணிக்காக விரைவில் தங்கள் பதவிகளை விட்டு விலகுவார்கள் என்று டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் வேண்டுகோளை ஏற்று மத்திய மந்திரிகளாக இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சி பணிக்கு அடுத்தடுத்து வர உள்ளனர்.மந்திரி பதவியில் இருந்து விலகும் காங்கிரஸ் தலைவர்களுக்கு விரைவில் தேர்தல் பொறுப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்