முக்கிய செய்திகள்:
ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க முடிவு

டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் அதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. 2–வது இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப் அழைப்பு விடுத்தார். அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 10 நாள் அவகாசம் கேட்டு இருக்கிறார்.அவருக்கு காங்கிரசும், பாரதீய ஜனதாவும் ஆதரவு அளிக்க முன்வந்தன. அதை ஏற்க கெஜ்ரிவால் நிபந்தனைகள் விதித்துள்ளார்.

இதற்கிடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக இணைய தளம் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடம் கருத்து கேட்டு வருகிறார். இதில் பல்வேறு விதமான கருத்துக்களை மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.இணைய தள கருத்து கேட்பில் பெரும்பாலானோர் காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதே போல் எஸ்.எம்.எஸ்.மூலமும் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களும் மறு தேர்தலை சந்திக்க விரும்பாமல் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு யோசனை தெரிவித்து வருகிறார்கள். மக்கள் நம்மீது நம்பிக்கை வைத்து 2–வது இடம் அளித்துள்ளனர்.ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பயன்படுத்த தவறினால் மக்கள் மத்தியில் கட்சிக்கு அதிருப்தி ஏற்படும் என்றும் யோசனை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆட்சி அமைக்கும் முடிவுக்கு கட்சி தலைமை வந்துள்ளது. இது பற்றி வருகிற திங்கட்கிழமை (23–ந்தேதி) கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்