முக்கிய செய்திகள்:
அமெரிக்க ஓரினச்சேர்க்கை ஜோடிகளையும் இந்திய அரசு ஏன் கைது செய்யக்கூடாது? யஷ்வந்த் சின்கா கருத்து

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராக பணியாற்றி வரும் தேவயானி கோப்ரகடே, கடந்த வாரம் விசா மோசடியில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவரை போதை மருந்துக்கு அடிமையானவர்களுடன் ஒரே செல்லில் அடைத்து அவமதித்ததாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் கோபமடைந்த இந்திய அரசு, நாடு முழுவதும் பணியாற்றி வரும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்களின் அடையாள அட்டைகளை சரண்டர் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும் அமெரிக்க காங்கிரஸ் குழுவினரை ராகுல்காந்தி, நரேந்திரமோடி போன்ற மூத்த தலைவர்கள் சந்திக்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், ஓரினச்சேரிக்கையாளர்கள் திருமணம் தடை செய்யப்படுவதாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவைப் பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் ஓரினச்சேர்க்கை ஜோடிகளை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.

இந்தியாவில் ஓரினச் சேர்க்கை முற்றிலும் சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் குறைந்த கூலி கொடுப்பதுதான் சட்டவிரோதம். அதனால், அனைத்து ஓரினச்சேர்க்கை ஜோடிகளையும் இந்திய அரசு ஏன் கைது செய்யக்கூடாது? அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் சின்கா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்