முக்கிய செய்திகள்:
ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை:மதவாத வன்முறை தடுப்பு சட்டத்தில் சிறிய மாற்றம்:

நாட்டில் மதவாத வன்முறை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மத கலவர தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இச்சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். நரேந்திரமோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று தனது ஒப்புதலை அளித்தது.

மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா, இந்த மசோதா பெரும்பான்மை சமூகத்துக்கு எதிரானது என்று கூறி இருந்த நிலையில், பல்வேறு கட்சிகளின் எதிர்ப்புகள் காரணமாக, மத்திய அரசு பணிந்தது. வரைவு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய முன்வந்து, 'கலவரம் ஏற்பட்டால் பெரும்பான்மை சமூகத்தினரே பொறுப்பு' என்பதை மாற்றி, எல்லா மதத்தினருக்கும் நடுநிலையை கடைபிடிக்கும் வகையில், இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாநில அரசுகள் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தும் சட்டப்பிரிவு கைவிடப்பட்டுள்ளது.

அதாவது, எந்த மாநிலத்திலாவது மத கலவரம் நடந்தால், கலவரத்தை ஒடுக்க, சம்பந்தப்பட்ட மாநில அரசைக் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாகவே துணை ராணுவப்படைகளை அனுப்பலாம் என்பதை திருத்தி, மத கலவரத்தை ஒடுக்க மத்திய அரசின் உதவி தேவை என்று சம்பந்தப்பட்ட மாநில அரசு கருதினால், படைகளை அனுப்ப மத்திய அரசின் உதவியை கேட்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்