முக்கிய செய்திகள்:
தனித்தெலங்கானா மாநிலம் அமைப்பது குறித்து, ஆந்திர மாநில சட்டப்பேரவை தனது கருத்தினை தெரிவிக்க 6 வாரகால கெடு

ஆந்திராவை 2-ஆக பிரித்து தனிமாநிலம் அமைக்க, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்ததையடுத்து, இதுதொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 5-ம் தேதி ஒப்புதல் அளித்தது. ஆனால், ஆந்திராவை 2-ஆக பிரிப்பதற்கு ஆந்திர மாநிலத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்த போதிலும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினரும், இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆந்திராவைப் பிரிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என அம்மாநில முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான திரு. கிரண்குமார் ரெட்டி, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சட்ட​நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றபின்னர், தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு வகைசெய்யும் மசோதாவை குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து, இம்மசோதா ஆந்திர மாநில சட்டசபைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலங்கானா மாநில மசோதா தொடர்பாக ஆந்திர மாநில சட்டப்பேரவை, தனது கருத்தினை தெரிவிக்க 6 வாரகால அவகாசம் அளிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்