முக்கிய செய்திகள்:
இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை கைது செய்தது குறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர அ.இ.அ.தி.மு.க. மனு - எதிர்க்கட்சிகள் அமளியைத் தொடர்ந்து மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் இன்று, தமிழகத்தைச் சேர்ந்த 300 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான ஒத்திவைப்புத் தீர்மானத்தை அவைத் தலைவர் எடுத்துக்கொள்ளாததால், அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று, தமது கோரிக்கையை வலியுறுத்தி குரல் எழுப்பியதைத் தொடர்ந்து கடும் அமளி ஏற்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக, இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவை இன்று காலை 11 மணிக்குக் கூடியதும், நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க. குழுத் தலைவர் டாக்டர். மு. தம்பிதுரை, இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சம்பவங்கள் குறித்து, தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பலமுறை பிரதமருக்கு கடிதங்கள் எழுதியும், எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என்றும், பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். நேற்று சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 300 தமிழக மீனவர்களை, அவர்களது 27 மீன்பிடி படகுகளோடு, இலங்கை கடற்படையினர் கைது செய்து சென்றிருப்பது குறித்தும், அப்போது பேசிய அவர், மீனவர்களின் குடும்பத்தினர் இதனால் மிகுந்த அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளாகியிருப்பதாகவும் குறிப்பிட்டார். இது ஒரு முக்கியமான பிரச்சினை என்பதால், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மறுத்ததால், அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

அதேநேரத்தில், தனித் தெலங்கானா, 2ஜி அலைக்கற்றை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளையும் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் எழுப்பியதைத் தொடர்ந்து, அவையில் அமளி நிலவியதால், அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், மாநிலங்களவையிலும் ​அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் டாக்டர். வா. மைத்ரேயன் தலைமையில் இதே பிரச்னையை முன் வைத்து, அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். மேலும், தனித் தெலங்கானா, 2ஜி அலைக்கற்றை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை பிற கட்சிகள் எழுப்பியதால், ஏற்பட்ட அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்