முக்கிய செய்திகள்:
டெல்லியில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் திடீர் திருப்பம் - பாரதிய ஜனதாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால் பரபரப்பு

டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அம்மாநில துணைநிலை ஆளுநர் விடுத்துள்ள அழைப்பை ஏற்று, புதிய அரசு அமைப்பது தொடர்பாக அவருடன் பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு. ஹர்ஷ் வர்தன் இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி 31 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாரதிய ஜனதாவும், ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சியமைக்க உரிமைகோரப்போவதில்லை என்று அறிவித்துள்ளதால், புதிய அரசு அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. டெல்லியில், தற்காலிகமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில், டெல்லியில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த வருமாறு, அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான ஹர்ஷ் வர்தனுக்கு, துணைநிலை ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். பாரதிய ஜனதாவின் முடிவைப்பொறுத்தே, டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகுமா? என்பது தெரியவரும்.

மேலும் செய்திகள்