முக்கிய செய்திகள்:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது குறித்து விவாதம் நடத்த அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தல் - சபாநாயகர் அனுமதி அளிக்காததால் எழுந்த அமளியை அடுத்து, 2வது நாளாக இன்றும் மக்களவை ஒத்திவைப்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல், தனி தெலுங்கானா மாநிலம் பிரிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால், இரண்டாவது நாளாக, இன்றும் மக்களவை கூடிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாநிலங்களவையும் நண்பகல் வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்தும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும், கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

மக்களவை தலைவர் திருமதி. மீராகுமார், இதற்கு அனுமதி அளிக்காததால், அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதன் காரணமாக எழுந்த அமளியால், மக்களவை, முதலில் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர், மீண்டும் அவை கூடியபோதும், அமளி தொடர்ந்ததால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். இதனால், ஏற்பட்ட அமளி மற்றும் தெலங்கானா, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக கூச்சல் குழப்பம் நீடித்ததால், அடுத்தடுத்து 2 முறை ஒத்திவைக்கப்பட் மாநிலங்களவை, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, மக்களவை இன்று காலை மீண்டும் கூடியது. அப்போது, அ.இ.அ.தி.மு.க., உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிப்பது தொடர்பாக தாக்கல் கொடுத்துள்ள ஒத்திவைப்பு தீர்மானம் மீது விவாதம் நடத்த வேண்டும் என முழக்கமிட்டனர். இதேபோல், ஆந்திராவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனி தெலுங்கானா மாநில பிரிப்பு கோரிக்கையை வலியுறுத்தியும், மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனால், அவையில் அமளி ஏற்பட்டதையடுத்து, ​நண்பகல் 12 மணி வரை மக்களவையை சபாநாயகர் திருமதி மீராகுமார் ஒத்திவைத்தார். இதே விவகாரத்தால், மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதையடுத்து, மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்