முக்கிய செய்திகள்:
பாரதிய ஜனதா ஆட்சியமைக்க ஆதரவு தர ஆம்ஆத்மி மறுப்பு - தேர்தல் முடிவு வெளியாகி இரண்டு நாட்கள் கடந்தபிறகும் டெல்லியில் அரசியல் குழப்பம் நீடிப்பு

டெல்லியில் ஆட்சியமைக்க பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு இல்லையென, ஆம்ஆத்மி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு வெளியாகி இரண்டு நாட்கள் கடந்தபிறகும் ஆட்சியமைக்க எந்தக் கட்சியும் உரிமை கோராததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா, தனிப்பெறும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள நிலையிலும், ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களை அக்கட்சி பெறவில்லை. இரண்டாவது இடத்தில் உள்ள ஆம்ஆத்மி கட்சியும் ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இந்நிலையில், பாரதிய ஜனதாவிற்கு நிபந்தனைகளின் பேரில் ஆட்சியமைக்க ஆதரவு தரலாம் என அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான திரு. பிரசாந்த் பூஷன் கருத்துத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த, ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனர், திரு. அரவிந்த் கஜ்ரிவால், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்க தமது கட்சி ஆதரவு தராது என திட்டவட்டமாக அறிவித்தார்.

தேர்தல் முடிவு வெளியாகி, இரண்டு நாட்கள் கடந்த பிறகும், டெல்லியில் நிலவிவரும் குழப்பத்திற்கு தீர்வு காணப்படவில்லை. இதனால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கான சூழல் அதிகரித்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்