முக்கிய செய்திகள்:
இலங்கை கடற்படை விவகாரம் தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுப்பு - அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவை ஒத்திவைப்பு

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்தும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும், அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி அளிக்காததை கண்டித்து எழுந்த அமளி காரணமாக, மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை இன்று கூடியதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்தும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும், தாங்கள் அளித்த ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், சபாநாயகர் இதற்கு அனுமதி அளிக்காததைத் தொடர்ந்து, அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பி, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இதன் காரணமாக எழுந்த அமளியைத் தொடர்ந்து, மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு மீண்டும் கூடியதும், தெலங்கானா, விலைவாசி உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாகவும் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து, மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்