முக்கிய செய்திகள்:
மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் - சீமாந்திரா காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நோட்டீஸ்

தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க முடிவு செய்துள்ள மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக சீமாந்திரா பகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரும், தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர சபாநாயகரிடம் தனித்தனியாக நோட்டீஸ் அளித்துள்ளனர்.

ஆந்திராவில் உள்ள தெலங்கானா பகுதிகளை பிரித்து தனித் தெலங்கானா அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றதையடுத்து, மத்திய அரசு இது குறித்த வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதல் குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சீமாந்திரா பகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. சாம்பசிவராவ், திரு. அருண்குமார், ஹர்ஷ்குமார் உள்ளிட்ட 6 பேரும், தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும் மக்களவையில் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கு அனுமதி கோரி தனித் தனியாக சபாநாயகர் மீராகுமாரிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர். 15வது மக்களவை கூட்டத்தொடரில், இதுவரை மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியிருப்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்