முக்கிய செய்திகள்:
டெல்லியில் ஆட்சி அமைக்க உரிமைகோர போவதில்லை என பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகள் அறிவிப்பு - குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகும் என தகவல்

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பாரதிய ஜனதாவும், ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சி‌அமைக்க உரிமை கோரப்போவதில்லை என தெரிவித்துள்ளன. இதனால், டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகும் என தெரிகிறது.

70 இடங்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், பாரதிய ஜனதா 31 இடங்களையும், அதன் தோழமைக் கட்சியான அகாலிதளம் ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன. திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும், ஐக்கிய ஜனதாதளம் மற்றும் சுயேட்சை தலா ஒரு இடத்தையும் பிடித்துள்ளன. ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த ஒரு கட்சிக்குமே அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், வரும் 18-ம் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும். ஆனால், ஆட்சி அமைக்க உரிமை கோராமல், எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாக டெல்லி பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. விஜய்கோயல், ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தெரிவித்திருப்பதால், இதுபற்றி, முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் திரு. நஜீப் ஜுங் தள்ளப்பட்டுள்ளார். அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பாரதிய ஜனதாவும், அதற்கு அடுத்தபடியாக அதிக இடங்களை கைப்பற்றியுள்ள ஆம்ஆத்மி கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனால், புதிய சட்டமன்ற நடவடிக்கைகளை ரத்து செய்து விட்டு, டெல்லியில் தற்காலிக குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்யக்கூடிய நிலை ஏற்படும் என டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், டெல்லி அரசியலில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்