முக்கிய செய்திகள்:
புதிய ராயலதெலங்கானா மாநிலம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெலங்கானாவுடன் ராயலசீமா பகுதியை இணைத்து புதிய ராயலதெலங்கானா மாநிலம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தெலங்கானா பகுதியில், முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தனித் தெலங்கானா மசோதாவின் மாதிரி வடிவத்தை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குழு, நேற்று கூடி, நதிநீர் பங்கீடு, எல்லை வரையறை மற்றும் அலுவலகப் பிரிவினைகள் குறித்த அறிக்கையை தயாரித்தது. மேலும், அனந்தப்பூர், கர்னூல் ஆகிய 2 மாவட்டங்களை கூடுதலாக தெலங்கானாவுடன் இணைக்கவும், ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

இதற்கு தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது. அதனையடுத்து, தெலங்கானா பகுதியில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அலுவலர்கள் பணிக்கு வராததால் வங்கிச் சேவையும், பேருந்துகள் இயக்கப்படாததால் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பணிக்கு வராததால், பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஏதும் தென்படாமல் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அரசு பள்ளி- கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாணவர்கள் வருகை தரவில்லை. இன்று நடைபெறவிருந்த அரசுத் தேர்வுகள் கைவிடப்பட்டு, மாற்றுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்