முக்கிய செய்திகள்:
பாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி மீது, கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு : மேற்குவங்க மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்ய கோரிக்கை

பாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி மீது, கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து, அண்மையில் ஓய்வு பெற்ற திரு. ஏ.கே. கங்குலி, தற்போது, மேற்குவங்க மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு எதிராக பயிற்சி பெண் வழக்கறிஞர் ஒருவர், இணையதளத்தில் வெளியிட்ட பாலியல் புகார், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகார் மீது, நடவடிக்கை எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சதாசிவம், கங்குலி மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த 3 நீதிபதிகளைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தார். 6 முறை கூடிய இந்த நீதிபதிகள் குழு, தங்களது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் அளித்துள்ளது. இதன் பின்னர் தான், பாலியல் புகாரில் சிக்கியவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, தன் மீதான புகாரை மறுத்த ஏ.கே. கங்குலி, சூழ்நிலைகளுக்கு, தான் பலியாகிவிட்டதாகத் தெரிவித்திருந்தார். இந்த புகாரையடுத்து, அவர் வகித்து வரும் மனித உரிமை ஆணைய தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த பாரத பாதுகாப்பு சங்கம் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில், ஏ.கே. கங்குலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், அவர் மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே, மேற்குவங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியிலிருந்து ஏ.கே. கங்குலி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படிருப்பது, மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்