முக்கிய செய்திகள்:
தெலங்கானா தொடர்பான வரைவு மசோதாவை, மத்திய அமைச்சர்கள் குழு, நேற்று இரவு இறுதி செய்தது

தெலங்கானா தொடர்பான வரைவு மசோதாவை, மத்திய அமைச்சர்கள் குழு, நேற்று இரவு இறுதி செய்தது. இதன்மீது, மத்திய அமைச்சரவை இன்று ஆலோசனை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, தெலங்கானாவின் எல்லை, தண்ணீர் பங்கீடு, சொத்து பகிர்வு போன்றவை குறித்து பரிந்துரைக்கும் வரைவு மசோதாவைத் தயாரிப்பதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு. சுஷில்குமார் ஷிண்டே தலைமையில், அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவினர், கடந்த 1 மாதமாக பலமுறை கூடி, தெலங்கானா மாநிலம் குறித்த வரைவு மசோதாவை தயாரித்தது. சீமாந்திரா பகுதியில் உள்ள அனந்தப்பூர், கர்னூல் மாவட்டங்களை தெலங்கானாவில் சேர்ப்பது குறித்தும், புதிய மாநிலத்திற்கு "ராயல தெலங்கானா" என பெயர் சூட்டுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று கூடிய மத்திய அமைச்சர்கள் குழு, தெலங்கானா வரைவு மசோதாவை இறுதி செய்தது. மேலும், இந்த மசோதா குறித்து, மத்திய அமைச்சரவை இன்று ஆலோசனை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மத்திய அரசின் இந்த உத்தேச முடிவுக்கு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைக் கண்டித்து, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி, இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் தெலங்கானா பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்