முக்கிய செய்திகள்:
தெலங்கானாவுடன் ராயலசீமா பகுதியை இணைப்பதற்கு எதிர்ப்பு - தெலங்கானா பகுதியில் நாளை முழு அடைப்புப் போராட்டம்

தெலங்கானாவுடன் ராயலசீமா பகுதியை இணைத்து புதிய ராயலதெலங்கானா மாநிலம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தெலங்கானா பகுதியில், முழு அடைப்பு நடத்தப்படும் என ராஷ்ட்ரீய தெலங்கானா சமிதி தலைவர் திரு.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, ஹைதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் அடங்கிய தெலங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று ராஷ்ட்ரீய தெலங்கானா சமிதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இத்திட்டத்திற்கு மத்திய அரசு முதலில் ஆதரவு தெரிவித்தபோதிலும், கடலோர ஆந்திரா மற்றும் சீமாந்திரா பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி தெலங்கானா மாநிலத்துடன் ராயலசீமா பகுதியில் உள்ள சில மாவட்டங்களை சேர்த்து, புதிதாக ராயலதெலங்கானா என்ற மாநிலத்தை அமைப்பது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை தெலங்கானா பகுதி முழுவதும் முழு அடைப்பு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். முழு அடைப்புக்கு மாணவர்களும், பணியாளர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்