முக்கிய செய்திகள்:
தெலங்கானா தனி மாநில மசோதா இக்குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் - மத்திய அரசு தகவல்

தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக, பரிந்துரைகளை அளிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குழு, இன்று மீண்டும் கூடி தனது அறிக்கையை இறுதி செய்யவுள்ளது. தெலங்கானா தனி மாநில மசோதா, இந்த குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து புதிய தெலங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை ஏற்று, புதிய தெலங்கானா மாநிலம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தெலங்கானா ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் இரு பிரிவுகளாக பிரிந்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக, பரிந்துரைகளை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் திரு. சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குழு, டெல்லியில் நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில், ஆந்திராவை பிரித்து அமைக்கப்படவுள்ள 2 மாநிலங்களுக்கும், அரசியலமைப்பு சட்டம் 371 D பிரிவின்படி சிறப்பு அந்தஸ்தை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. புதிதாக உருவாக்கப்படவுள்ள மாநிலத்தில் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த 2 மாவட்டங்களையும் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரை குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படாததால், புதிய மாநிலம் தொடர்பான அறிக்கை மற்றும் வரைவு மசோதாவை அமைச்சர்கள் குழுவால் இறுதி செய்ய முடியவில்லை. இந்நிலையில், இன்று மீண்டும் கூடி ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று நடைபெறும் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் குழு, தனது அறிக்கையை இறுதி செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலங்கானா தனி மாநில மசோதா, இந்த குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்