முக்கிய செய்திகள்:
யுனிசெஃப் தெற்காசிய விளம்பரத் தூதராக நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமனம் : குழந்தைகள் மத்தியில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாக உறுதி

தெற்காசியாவுக்கான ஐ.நா. யுனிசெஃப் அமைப்பின் தூதராக, அண்மையில் ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், குழந்தைகளிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் அவர் ஈடுபடுவார்.

கடந்த 24 வருடங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வந்த சச்சின் டெண்டுல்கர், அண்மையில் ஓய்வுபெற்றார். மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்துள்ள நிலையில், மற்றொரு சிறப்பம்சமாக, தற்போது, தெற்காசியாவுக்கான ஐ.நா. யுனிசெஃப் அமைப்பின் தூதராகவும் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மும்பையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தெற்காசியப் பகுதியில் சுமார் 70 கோடி பேர் கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பதால், மிகப்பெரும் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாகவும், இதனை போக்கும் வகையில் அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தாம் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். யுனிசெஃப் தூதராக, சச்சின் டெண்டுல்கர் 2 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்