முக்கிய செய்திகள்:
சச்சின் டெண்டுல்கரை புகழ்வதை பாகிஸ்தான் ஊடகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் - தாலிபான் தீவிரவாதிகள் மிரட்டல்

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை புகழ்வதை பாகிஸ்தான் ஊடகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, தாலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

உலக கிரிக்கெட் வரலாற்றில் எட்டமுடியாத உச்சத்தைத் தொட்ட நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் அண்மையில் மும்பையில் நடைபெற்ற 200-வது டெஸ்ட் தொடரையொட்டி, கிரிக்கெட் விளையாட்டில் இருந்து முழுமையாக ஓய்வுபெற்றார். ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் தொடர் உள்ளிட்ட போட்டிகளில் சச்சின் புரிந்து சகாப்தங்களை உலக நாடுகளில் உள்ள தலைவர்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இதேபோல் பாகிஸ்தானில் உள்ள ஊடகங்களும் சச்சின் சாதனைகளுக்கு தொடர்ந்து மகுடம் சூட்டி வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான தஹ்ரிக்-இ-தாலிபான் அமைப்பு அந்நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் வீடியோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வீடியோவில் அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஷாஹிதுல்லா ஷாஹித், சச்சின் டெண்டுல்கர் இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்றும், அவரை பாகிஸ்தான் ஊடகங்கள் புகழ்வது துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிஸ்பா-உல்-ஹிக்கை தேவையின்றி கடுமையாக விமர்சனம் செய்து வரும் பாகிஸ்தான் ஊடகங்கள், சச்சினை புகழ்வது வேதனை அளிக்கக்கூடியது என்றும், எனவே, சச்சினை புகழ்வதை பாகிஸ்தான் ஊடகங்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஷாஹிதுல்லா ஷாஹித் அந்த வீடியோவில் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்