முக்கிய செய்திகள்:
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.

கான்பூரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின், தொடக்க ஆட்டக்காரர்கள் சார்லஸ் 11 ரன்களிலும், போவல் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாமுவல்ஸ், அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். டர்ரென் ப்ராவோ, ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் சேர்த்தார். 50 ஓவர்களின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டு இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையடுத்து, 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். விராட் கோலி 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த தவானும், யுவராஜ் சிங்கும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 190-ஆக இருந்தபோது, யுவராஜ் சிங் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய தவான், 119 ரன்கள் சேர்த்தார். இறுதியில், 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 266 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.

இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை, 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. சதம் விளாசிய ஷிகர் தவான் ஆட்டநாயகனாகவும், விராட் கோலி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர், வரும் 5-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த வெற்றி, இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்