முக்கிய செய்திகள்:
24 ஆண்டுகால கிரிக்கெட் சகாப்தத்தை நிறைவு செய்தார் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் - அவரை கௌரவிக்கும் வகையில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க, மத்திய அரசு திட்டம்

இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் பயணித்து, 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அபார சாதனைகளை படைத்த நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் உலகில் இருந்து இன்று கண்ணீர் மல்க பிரியா விடைபெற்றார். அவரை கௌரவிக்கும் வகையில், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை வாங்டே ஸ்டேடியத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்று அபார வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, கண்ணீர் மல்க விடைபெற்ற சச்சின் டெண்டுல்கருக்கு, ரசிகர்கள், ஆரவாரித்து வாழ்த்தினர். சக வீரர்கள் ஆரத்தழுவி விடைகொடுத்தனர்.

ஆட்டத்தின் இறுதியில் பேசிய சச்சின் டெண்டுல்கர், தனது இளமை காலத்தை உணர்ச்சி பெருக்குடன் நினைவு கூர்ந்தார். தனது உடல் நலத்தை மிகுந்த கவனத்துடன் தாயார் பாதுகாத்ததாகவும், இன்றும் அவர் தனக்காக பிரார்த்தனை செய்து வருவதாகவும் தெரிவித்த டெண்டுல்கர், தனது சகோதரர் அஜித் டெண்டுல்கர், கிரிக்கெட் விளையாட்டு குறித்து அறிவுரை வழங்கியதோடு, பயிற்சியாளரிடம் அழைத்துச் சென்றது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றும், சகோதரி முதல் முறையாக கிரிக்கெட் மட்டை வாங்கிக் கொடுத்ததையும் நினைவு கூர்ந்தார். 1990 ஆம் ஆண்டு தனது மனைவி அஞ்சலியை சந்தித்ததை குறிப்பிட்ட அவர், மகன் மற்றும் மகள் ஆகியோர் வைரங்களாக கிடைத்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். தாயார், சகோதர-சகோதரிகள், மனைவி மற்றும் தனது வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளில், உடனிருந்த அனைவருக்கும் சச்சின் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தனது 24 ஆண்டுகால நீண்ட பயணத்தை நிறைவு செய்த சச்சின் டெண்டுல்கரை, சக வீரர்கள் தங்கள் தோள்களில் தூக்கியபடி உற்சாகமாக மைதானத்தை வலம் வந்தபோது, ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம், அரங்கையே அதிரச் செய்தது. இதனிடையே, சச்சினை கௌரவிக்கும் வகையில், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலக வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்