முக்கிய செய்திகள்:
நாட்டிலேயே முதன்முறையாக உலக சதுரங்க வாகையர் போட்டி, சென்னையில் நடைபெறுகிறது - நாளை கோலகலத்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க, உலக வாகையர் பட்டத்திற்கான சதுரங்கப் போட்டி, இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில், வரும் 9-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இப்போட்டிக்கான தொடக்க விழா, நாளை கோலாகலமாக நடைபெறவுள்ளது. விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, உலக சதுரங்க வாகையர் போட்டியை சென்னையில் நடத்துவதற்காக 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். உலக சதுரங்க விளையாட்டுக் கூட்டமைப்பில் உள்ள 172 நாடுகளைச் சேர்ந்தவர்கள், இப்போட்டியைக் காண மிகவும் ஆவலாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தினை வளர்க்கும் நோக்கத்துடன், முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 1992-ம் ஆண்டு, இளைஞர், விளையாட்டு பயிற்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில விளையாட்டு வளர்ச்சி வாரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்" என்ற அமைப்பினை உருவாக்கினார். மேலும், தலைசிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதுடன், அவர்கள் உயர்ந்த சாதனைகளை புரிந்திடும் வகையில், பன்னாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத்தொகையை கடந்த 2011-ம் ஆண்டு இருமடங்காக உயர்த்தியும் அறிவிப்பு வெளியிட்டார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற உலக சதுரங்க வாகையர் போட்டியில், தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த், 5-வது முறையாக பட்டம் வென்றதையடுத்து, அவரை கெளரவிக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, ஊக்கத்தொகையாக 2 கோடி ரூபாய் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இத்தொகையினைப் பெற்றுக்கொண்ட திரு. விஸ்வநாதன் ஆனந்த், சதுரங்க விளையாட்டினை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சதுரங்க விளையாட்டில், இளைய சமுதாயத்தினரின் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் வகையில், உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டியை, 20 கோடி ரூபாய் செலவில், கடந்த ஆண்டே சென்னையில் நடத்திட முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்தார். உலக சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவர் திரு. கிர்சன் இல்யும்சினவ், கடந்த 2011-ம் ஆண்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததையடுத்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், இந்தப் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில், ரஷ்யா அதிகத் தொகையை குறிப்பிட்டதால் அந்நாட்டில் இப்போட்டி நடைபெற்றது. எனினும், உலக சதுரங்க கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று, உலக சதுரங்க வாகையர் போட்டியை, வரும் நவம்பர் மாதத்தில் சென்னையில் நடத்துவதற்கு தமது தலைமையிலான அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

உலக சதுரங்க வாகையர் போட்டிக்கான லோகோ மற்றும் இணையதளம், கடந்த செப்டம்பா் மாதம் 23-ம் தேதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. உலக சதுரங்கப் போட்டி சென்னையில் நடைபெறுவது பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திடவும், சதுரங்க வீரர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு மாநில சதுரங்க விளையாட்டுக் கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், உலக சதுரங்க வாகையர் போட்டி தொடக்க விழா, நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, வரும் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை, சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓட்டல் ஹைட்டில் போட்டிகள் நடைபெற உள்ளன. தற்போதைய உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் போட்டியில் பங்கேற்கின்றனர். இதற்காக மேக்னஸ் கார்ல்சன் ஏற்கெனவே சென்னை வந்துள்ளார்.

உலக சதுரங்க வாகையர் போட்டி நடைபெறுவதையொட்டி, தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகம், சென்னையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆண்கள் பங்கேற்கும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர், உலக சதுரங்கக் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியல் மற்றும் தேசிய சதுரங்க சாம்பியன் உள்ளிட்டவற்றுக்கான போட்டிகளையும் நடத்துகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெறவிருக்கும் உலக சதுரங்க வாகையர் போட்டி, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்களிடம் மிகப்பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்