முக்கிய செய்திகள்:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஷா கமிஷன், தனது விசாரணை அறிக்கையை, மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
நிலக்கரி துறைக்கு பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்பு வகித்த காலத்தில், தனியார் நிறுவனங்களுக்கு சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, சி.ஐ.ஜி. அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, நாடு முழுவதிலும் நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஷா கமிஷன், தனியாக விசாரணை மேற்கொண்டது. ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், கர்நாடகா, கோவா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வரும் சுரங்கத்தின் நிறுவனங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்திய ஷா கமிஷன், 2006 – 2011 ஆம் ஆண்டில் சுரங்க ஒதுக்கீடுகளை முறைகேடாகப் பெற்ற நிறுவனங்களின் வங்கி கணக்கு வழக்குகளையும், அதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பையும் ஆராய்ந்து, முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக இரண்டு அறிக்கைகளை மத்திய அரசிம் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில், நிலக்கரி சுரங்க உரிம முறைகேடு தொடர்பான 3 வது மற்றும் இறுதி அறிக்கையை ஷா கமிஷன், மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்திடம் நேற்று வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில், இரும்பு, மெக்னீஷியம் தாதுக்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கவும், எதிர்காலங்களில் சுரங்க முறைகேடுகளை தடுக்க சில யோசனைகளையும் ஷா கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஷா கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளன.

மேலும் செய்திகள்