முக்கிய செய்திகள்:
இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை : முதலமைச்சர் ஜெயலலித

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்கதையாகி வரும் நிலையில், பாக் நீரிணை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் உட்பட 65 தமிழக மீனவர்களையும், அவர்களின் 35 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நீடிப்பதை தடுக்க, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பதுடன், தூதரக ரீதியிலும் இலங்கை அரசை அறிவுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம், இரு சம்பவங்களில் அப்பாவி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை​, பிரதமரின் கவனத்திற்கு மீண்டும் வருத்தத்துடன் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல் சம்பவங்கள் குறித்த பிரச்னையை, மத்திய அரசு உணர்ச்சிபூர்வமற்ற வகையிலும், அதிக தீவிரம் காட்டாமலும் கையாளுவதால், வாழ்வாதாரத்திற்காக, அமைதியான முறையில் தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழிலை மேற்கொண்டுள்ள இந்திய மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினரின் கொடூரமான தாக்குதல்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் பிரச்னையில், மத்திய அரசு மென்மையான, மெத்தனமான போக்கை கடைபிடிப்பதாலேயே, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள்​ தொடர்கதையாகி வருகின்றன – நேற்று முன்தினம் நிகழ்ந்த தாக்குதல் குறித்த இருவேறு சம்பவங்களை பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவர தாம் விரும்புவதாக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள், தங்களின் 5 மீன்பிடி படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் – ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தைச் சேர்ந்த இந்த மீனவர்கள், 5 விசைப் படகுகளுடன் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக தலைமன்னார் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் – புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் 4 விசைப்படகுகளுடன் பாக் நீரிணை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் – தமிழக மீனவர்கள் மீது இ​துபோன்ற கொடூரத் தாக்குதல் சம்பவங்களை முடிவுக்குக்​ கொண்டுவர, தூதரக ரீதியிலான முயற்சிகளை எடுக்காமலும், உறுதியான எதிர்ப்பை இலங்கை அரசுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்காமலும் இந்திய அரசு, மெத்தனப் போக்குடன் செயல்படுவதால், மீனவர்கள் கடத்தப்படுவது, கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நீடிப்பதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள்​ மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து, பிரதமருக்கு, தாம் எழுதிய எந்தக் கடிதங்களுக்கும் உரிய பலன் கிடைக்கவில்லை – பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் இந்த வாழ்வாதாரப் பிரச்னை குறித்து, அண்மையில், இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சு நடத்தி, அதுதொடர்பான அறிக்கை வெளியிட்டிருந்தால், அது, சற்றே அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கும் – இரு நாடுகளையும் சேர்ந்த மீனவர்கள் சங்கத்தினர் சந்தித்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை ஏற்பட்டிருக்கும் – ஆனால், மனவேதனை அளிக்கக்கூடிய, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்னையை கையாளுவதில், இயல்பான, உணர்ச்சிபூர்வமற்ற, பாரபட்சமான வகையில் மத்திய அரசு நடந்துகொண்டுள்ளதாகத் தோன்றுவதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்திய கடல்பகுதியில் குஜராத் மீனவர்கள் மீது அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, மத்திய அரசு அவர்கள் மீது காட்டிய அக்கறையை, தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது, காட்டத் தவறியுள்ளது – ஒருதலைப்பட்சமாகவும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் மத்திய அரசு நடந்து கொள்வதையே இதுகாட்டுகிறது – மேலும், பாகிஸ்தான் அரசின் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி, குஜராத் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, கடுமையான கண்டனத்தையும் மத்திய அரசு தெரிவித்தது – ஆனால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையில், மத்தியஅரசு, எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல், தொடர்ந்து மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதுடன், அக்கறையின்மையுடன் நடந்து கொள்வது தெரியவருவதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இதனால், பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் சொந்த நாட்டி​லேயே தாங்கள் அந்நியர்கள்போல் உணர்வதாகவும், சொந்த நாடே தங்களை கைவிட்டு விட்டது போல கருதுவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையில், பிரதமர் நேரடியாகத் தலையிட்டு, உறுதியான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், இப்பிரச்னையை இலங்கை அரசின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட 37 மீனவர்கள் உட்பட 65 தமிழக மீனவர்களையும், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மீனவர்களின் 35 படகுகளையும் விடுவிக்க, இலங்கை அரசை அறிவுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், கடலில் மீன்பிடித்து வரும் அப்பாவி ஏழை தமிழக மீனவர்களுக்கு எதிராக, இலங்கை கடற்படையினர் நடத்திவரும் தொடர் தாக்குதல்களை தடுத்து நிறுத்துமாறு, இலங்கை அரசை கடுமையாக வற்புறுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்