முக்கிய செய்திகள்:
ஏற்காடு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல், நாளை நடைபெறுவதையொட்டி, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு தொகுதியில் மொத்தம் உள்ள 290 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக போலீசாருடன், 9 கம்பெனி துணை ராணுவப் படை வீரர்களும் இணைந்து, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொகுதி முழுவதும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார், தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, சேலம் கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, மாவட்ட ஆட்சியர் திரு. மகரபூஷணம், மாவட்ட கண்காணிப்பாளர் திரு. சக்திவேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், துணை ராணுவம் மற்றும் தமிழக போலீசாரின் பாதுகாப்புடன், வாகனங்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த வாக்குச்சாவடிகளை சென்றடைந்ததும், குறுந்தகவல்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்