முக்கிய செய்திகள்:
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் காவல் துறையினர்கள் தீவிர பாதுகாப்பு
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, தி.நகர், புரசைவாக்கத்தில் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதுகிறது. தற்போது காலாண்டு விடுமுறையுடன், ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை நாட்களும் வந்ததால் கடந்த ஒருவார காலமாகவே தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடை வீதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள். குறிப்பாக மாலை 4 மணிக்கு பின்னர் தி.நகரிலும், புரசைவாக்கத்திலும் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் இருக்கிறது. இதனால் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகளை இப்போதே போலீசார் மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். தி.நகரில் ரங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான்ரோடு, தெற்கு உஸ்மான் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் ஏற்கனவே 8 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் கூடுதலாக 20 கேமராக்கள் நிறுவப்படுகின்றன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தே பார்ப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக போத்தீஸ் ஜவுளி கடை அருகில் சிறிய கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் உயரமான கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்தபடியே பைனாகுலர் மூலமாகவும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் செயின் மற்றும் கைப்பைகளை பறித்துச் செல்லும் பிக்பாக்கெட் திருடர்களை பிடிக்கவும் மாறுவேடத்தில் போலீசார் சுற்றி வருகிறார்கள். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் சில்மிஷம் செய்பவர்களை பிடிக்க பெண் போலீசார் சுடிதார் அணிந்து கொண்டு கண்காணிக்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமை என்பதால் தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திலும் நேற்று கூட்டம் அலைமோதியது. இதனை கட்டுப்படுத்துவற்காக சாலையோரமாக தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்திருந்தனர். இதனால் பொது மக்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடிந்தது. ஒரு பக்கம் தீபாவளி கூட்டம், இன்னொரு பக்கம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வந்த கூட்டம் என நேற்று தி.நகரில் திரும்பிய திசையெல்லாம் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. தி.நகர் துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் விஜயராகவன் ஆகியோரது மேற்பார்வையில் மாம்பலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர். இரவு 12 மணி வரையிலும் வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். இதனால் செயின் பறிப்பு, பிக்பாக்கெட் உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்கள் தடுக்கப்பட்டன. புரசைவாக்கத்திலும் நேற்று மாலையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக பொது மக்கள் அதிக அளவில் கூடினர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராம கிருஷ்ணன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
மேலும் செய்திகள்