முக்கிய செய்திகள்:
எழும்பூர் ரெயில் நிலையத்தில் சுழல் கேமரா

சென்னை சென்ட்ரல் ரெயில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை தடுக்கும் வகையில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் மூலம் ரெயில் நிலையங்கள் சோதனையிடப்படுகிறது.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள 11 பிளாட்பாரங்களை கண்காணிக்கும் வகையில் ஏற்கனவே 44 கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.

அந்த கேமராக்கள் முன்பு ஒரு பகுதியை நோக்கி நிலை நிறுத்ததப்பட்டு இருந்தது. தற்போது அனைத்து கேமராக்களும் சுழலும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

நேற்று முதல் இந்த நவீன கேமராக்கள் அனைத்து பிளாட் பாரங்களில் வந்து செல்லும் ரெயில்கள், பயணிகள் நடமாட்டம் முன் பதிவு மையம், சாதாரண டிக்கெட் கவுண்டர் மையம், பயணிகள் காத்திருக்கும் இடம், காந்தி இர்வின் சாலையில் இருந்து ரெயில் நிலையத்திற்கு வரும் வாகனங்கள், பொது மக்கள் நடமாட்டம் போன்றவற்றை கண்காணித்து காட்சிகளை பதிவு செய்யும்.

இதே போல பூந்தமல்லி சாலை (வடக்கு நுழைவு வாயில்)யில் இருந்து வரும் பயணிகள், வாகனங்களையும் கேமராக்கள் கண்காணிக்கின்றன.

எழும்பூர் ரெயில் நிலையத்தின் நான்கு பகுதிகளையும் சுற்றி படம் எடுக்கும் வகையில் இந்த கேமராக்கள் சுழன்று காட்சிகளை பதிவு செய்யும். இதில் இருந்து யாரும் தப்ப முடியாது.

மேலும் 3 கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளது. வி.ஐ.பி. கார் பார்க்கிங், பயணிகள் கார் பார்க்கிங் பகுதி, 4–வது பிளாட் பாரத்தில் உள்ள ஓட்டலை கண்காணிக்கும் வகையில் இந்த கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது.

கார் நிறுத்துமிடங்களில் ‘பை’, பெட்டிகளை சதிக்காரர்கள் வைத்து விடாமல் இருப்பதற்காக இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர இருசக்கர வாகனங்கள் நிற்கும் பகுதியிலும் கேமரா கண்காணித்து வருகிறது. கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை எழும்பூர் டி.எஸ்.பி.பொன் ராம் மற்றும் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் சரவணன் கூறுகையில், எழும்பூர் ரெயில் நிலையத்தில் நான்கு புறமும் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 47 கேமராக்கள் மூலம் மக்கள் நடமாட்டம், ரெயில்கள் வந்து செல்வது துல்லியமாக கண்காணித்து வருகிறோம். 24 மணி நேரமும் இந்த கேமராக்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் இயக்கி வருகிறார்கள்.

கேமராவில் இருந்து யாரும் தப்பி செல்ல இயலாது. அந்த வகையில் நீண்ட தூரம் வரை இவை காட்சிகளை படம் பிடித்து பதிவு செய்யும் என்றார்.

மேலும் செய்திகள்