முக்கிய செய்திகள்:
சென்னை அகஸ்தீஸ்வரர் கோவில் வசந்த மண்டபம் இடிப்பு

வில்லிவாக்கம், அகஸ்தீஸ்வரர் கோவில் வசந்த மண்டபத்தை இடித்தும், நவக்கிரக சிலைகளை இடமாற்றியும் வைத்த, இந்து சமய அறநிலைய துறையினரின் நடவடிக்கையால், பக்தர்கள் கொதிப்படைந்து உள்ளனர்.வில்லிவாக்கத்தில், 400 ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள இந்த கோவிலில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவங்கின.


'கோவிலில் எந்த மாற்றம் செய்வதாக இருந்தாலும், பக்தர்களிடம் ஆலோசிக்கப்படும்' என, இந்து சமய அறநிலைய துறை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சொர்ணாம்பிகை அம்மனுக்கு, நேர் எதிரே இருந்த நவகிரக சிலைகள், திருப்பணிக்காக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2008ல், 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, வசந்த மண்டபமும் திருப்பணி என்ற பெயரில், பக்தர்களிடம் எவ்வித ஆலோசனையும் பெறாமல், இடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் நடந்த இந்து சமய அறநிலைய துறையின் இந்த நடவடிக்கைகள், பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது:

கடந்த, ஆறு ஆண்டுகளாக,வசந்த மண்டபம் நல்ல நிலையில் இருந்தது. ஆனாலும், திருப்பணி என்ற பெயரில், மண்டபத்தை இடித்து உள்ளனர். அதுகுறித்து, பக்தர்களிடமோ, ஆன்மிக சங்கங்களிடமோ, ஆலோசனை கேட்கவில்லை. இதனால், பக்தர்கள் வழங்கிய, 18 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை குறித்து, அறநிலைய துறை உயர் அதி காரிகள், உடனடியாக விசாரிக்க வேண்டும். விரயமான, 18 லட்சம் ரூபாயை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, செயல் அலுவலர் தேன்மொழி கூறியதாவது: வசந்த மண்டபம், கட்டப்பட்டிருந்தது ஆகம முறைப்படி தவறு என கண்டறியப்பட்டது. அதனால், தற்போது இடிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்ததும் மண்டபம் மீண்டும் கட்டப்படும். மேலும், நவகிரக சன்னிதி, கோவிலின் அக்னி மூலையில் இருந்தது. ஆகம முறைப்படி, அவற்றை ஈசான மூலைக்கு மாற்றி கட்டியுள்ளோம். இவற்றிற்கான அனுமதி, இந்து சமய அறநிலைய துறையிடம் உரிய முறையில் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்