முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க. பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது : ப.சிதம்பரம்

தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடந்தது. மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:–

பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் திட்டங்கள், செயல்களை பற்றி பொது மக்களிடத்தில் எடுத்து சொல்லாதது மிகப்பெரிய தவறான செயல். பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட் டங்கள், நடத்தாமல் சும்மா இருப்பது கெட்டிக்காரத்தனம் என்று காங்கிரசார் நினைக்கிறார்கள்.

தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர். தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்றெல்லாம் கூறுகிறார்கள். எந்த கட்சியில் அங்கம் வகிக்க போகிறார்கள் என்றால் தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா கட்சியுடன் அங்கம் வகிக்க மாட்டோம். அல்லது அங்கம் வகிக்க போகிறோம் என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த கேள்வியை முதல்–அமைச்சரிடம் கேட்க எனக்கு தயக்கமாக இருக்கிறது. காரணம் அதற்கு அவர் பதில் அளிக்க மாட்டார். அவ்வாறு அவர் பதில் அளித்தாலும் அது தவறாகத்தான் இருக்கும்.

அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சியின் பழைய வரலாறுகளை பார்க்கும் போது தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது.

அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் மட்டும் வெற்றி பெற்று டெல்லி சென்றால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு நீரோட்டத்தில் இருந்து விலகிவிடும். இந்திய அரசில் தமிழக அரசின் முத்திரையை பெறுவதுடன் மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளிலும் பங்களிப்பிலும் தமிழகம் பயன்பெற வேண்டுமானால் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒரு சிலர் வெற்றி பெற்று டெல்லி செல்ல வேண்டும்.

தமிழகத்தில் 'கை' மெலிந்து பலவீனமாக இருக்கிறது. அதனை உரம் ஏற்றி தைரியமாக தேர்தலை சந்திக்க வேண்டும். கடந்த 10 ஆண்டு சாதனையை மக்களுக்கு எடுத்துச் சொன்னால் தமிழக மக்கள் வாக்களிப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்