முக்கிய செய்திகள்:
வாகன சோதனையில் வியாபாரிகளிடம் கெடுபிடி கூடாது: என்.ஆர்.தனபாலன்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின், தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள சிறிய வியாபாரிகளை எல்லாம் மிகவும் நசுக்கி தேர்தல் கமிஷன் துன்புறுத்த தொடங்கியுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் விலைவாசிகள் எல்லாம் உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு தொழில் செய்தாலும் அதன் மதிப்பு மிகவும் பெருமளவாகவே உள்ளது. ஆதலால் மளிகை மற்றும் காய்கறி போன்ற வியாபாரம் செய்யும் சிறிய வியாபார பெருமக்கள் அன்றாடம் பணத்தை கையில் எடுத்துக் கொண்டு மார்க்கெட் செல்லும் நிலைமை தான் உள்ளது.

இவர்களுக்கு தேர்தல் கமிஷன் பல கட்டுப்பாடுகளை விதித்து ரூ.50 ஆயிரம் வரை எடுத்து செல்லலாம் எனவும் அதற்காக ஆவணங்கள் ஏதாவது ஒன்றினை கையில் கொண்டு செல்லவேண்டும் என்றும் கூறியுள்ளதை வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் ரூ.50 ஆயிரம் என நிர்ணயித்திருப்பது மிகவும் குறைவான ஒன்றாகும். இதனை ரூ.2,00,000வரை கொண்டு செல்லலாம் என்று தேர்தல் கமிஷன் தனது விதியை தளர்த்திக்கொள்ள வேண்டும்.

பகலில் கடனுக்கு வியாபாரம் செய்து விட்டு இரவில் பணம் வசூல் செய்து கொண்டு செல்லும் வியாபாரிகளிடம் தேர்தல் கமிஷன் அதிக அளவு கெடுபிடி செய்யக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்