முக்கிய செய்திகள்:
சென்னையில் மீட்டர் பொருத்தாமல் ஓட்டிய ஆட்டோக்கள் லைசென்ஸ் ரத்து

சென்னையில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது கட்டாயம் என்ற நடைமுறை அமலில் உள்ளது. மீட்டர் போடாமல் இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில் இதுவரை 120 ஆட்டோக்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புகார் செய்துள்ளனர். 1.8 கி. மீட்டருக்கு ரூ.25 கட்டணம் எனவும், அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.12 கட்டணம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் சரியாக கடைபிடிப்பதில்லை.குறிப்பாக காலை நேரத்தில் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் இருந்து அவசரம் அவசரமாக வீட்டுக்கு செல்பவர்களை குறி வைத்து ஆட்டோ டிரைவர்கள் வசூல் செய்து வருகிறார்கள்.

எழும்பூர் ரெயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் ரெயில் நிலையத்தின் உள்ளே நடைமேடையை ஒட்டியுள்ள இடத்தில் காலை நேரங்களில் 5–க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நின்று கொண்டிருக்கும் இவர்கள் யாரும் மீட்டர் போடுவதில்லை. மாறாக 2 மடங்கு கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள்.இதுபற்றி அவர்களிடம் கேட்டால் நாங்கள் ரெயில்வே துறைக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பணம் கட்டித்தான் இங்கு நின்று கொண்டிருக்கிறோம். மீட்டர் போட்டால் கட்டுப்படியாகாது என்று கறாராக கூறி வருகிறார்கள்.

சென்னையில் அனைத்து பகுதிகளிலுமே இதே நிலைதான் நீடிக்கிறது. மீட்டர் போடாமல்தான் வருவேன். இஷ்டம் இருந்தால் ஏறுங்கள். இல்லையென்றால் வேறு ஆட்டோவை பார்த்துக் கொள்ளங்கள் என்றும் ஒருசில ஆட்டோ டிரைவர்கள் கூறுகிறார்கள்.

ஆட்டோ மீட்டர் தொடர்பாக 9003130103 என்ற செல்போன் எண்ணிலும், 044–23452330 என்ற எண்ணிலும் புகார் செய்யலாம்.

 

மேலும் செய்திகள்