முக்கிய செய்திகள்:
எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தயாரா?: மா.சுப்பிரமணியன்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அறிவார்ந்த ஆலோசனைகளையேற்று செயல்பட்ட சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில், இந்தியாவிற்கே வழிகாட்டியாக பல்வேறு வகையான மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்று, அதற்காக சிறந்த மாநகராட்சி, சிறந்த மேயர் என்ற பல்வேறு விருதுகளைப் பெற்ற பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீதும், என் மீதும் சொல்லப்பட்ட புகார்களை நிரூபிப்பதற்கு வாய்ப்பும் வசதியும் ஏற்படுத்தித்தருகிற வகையில் நானாகவே நீதிமன்றத்திற்குச் சென்றேன்.

அந்த வழக்கு தள்ளுபடியாக மேயர் சைதை துரைசாமி எடுத்த முயற்சிகளை மக்கள் நன்கு அறிவர். நாங்கள் கேட்க விரும்புவது, எங்கள் மீது கூறும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசின் அனுமதியை மேயர் துரைசாமியே பெற்று, வழக்கை சட்டப்படி சந்தித்திருக்கலாம்.மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது, ஓனிக்ஸ் நிர்வாகத்திற்கு குப்பை எடுக்க ஒரு டன்னுக்கு கொடுத்த தொகை 672 ரூபாய். கடந்த 2006 - 2011 காலத்தில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகம் நடைபெற்றபோது, குப்பை எடுக்க ஒரு டன்னுக்கு கொடுத்த தொகை 642 ரூபாய்.

ஆனால், தற்போது நீங்கள் ஐதராபாத்தைச் சேர்ந்த ‘ராம்கே’ நிறுவனத்திற்கு ஒரு டன் குப்பை எடுக்க கொடுக்கும் தொகை 1,543 ரூபாய். ரூ.1,543-க்கும், ரூ.642-க்கும் இடைப்பட்ட தொகை எங்கே போகிறது? என்று கேட்டும், தி.மு.க. மாநகராட்சி நிர்வாகம் செய்தபோது, மீட்டெடுக்கப்பட்ட ரூ.4,000 கோடி மதிப்பிலான நிலங்களை, மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு என்ன காரணம்? என்று கேட்டும்; இவ்விரு கேள்விகளுக்கும் பல மாதங்களாகியும் இன்னும் விளக்கம் தரப்படவில்லை. என்மீதும் - மு.க.ஸ்டாலின் மீதும் குற்றச்சாட்டுகளை சட்டபூர்வமாக நிரூபிக்கத் தயாரா? எந்த விதமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள எப்போதும் நாங்கள் தயார்.இவ்வாறு முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

 

மேலும் செய்திகள்