முக்கிய செய்திகள்:
ஜெயலலிதா பிறந்த நாள் மாரத்தான் போட்டி: வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு தங்க காசு பரிசு

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்த நாளையொட்டி, வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாரத்தான் ஒட்டப்பந்தயம் இன்று நடந்தது.சென்னை மெரீனா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே இந்த மாரத்தான் போட்டி நடந்தது. இதில், ராயபுரம், திரு.வி.க.நகர், எழும்பூர் தொகுதிகளில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரம் மாணவ – மாணவிகள் பங்கேற்றனர். போட்டிக்கு வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பாலகங்கா எம்.பி. தலைமை தாங்கினார்.

அமைச்சர்கள் வளர்மதி, மாதவரம் மூர்த்தி, சின்னையா, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை இந்த போட்டி நடந்தது.போட்டியில் வெற்றிபெற்ற மாணவ–மாணவிகளுக்கு தங்ககாசு, ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்பட்டன. முதல் பரிசு பெற்ற மாணவி மெரிசா, மாணவர் காலேஷ் ஆகியோருக்கு தலா 8 கிராம் தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது.

2–வது இடம் பிடித்த மாணவி கோமதி, மாணவர் சரத்குமார் ஆகியோர் தலா 6 கிராம் தங்க நாணயமும், 3–வது இடம் பிடித்த மாணவ, மாணவிகள் பிரியா, பாலாஜி ஆகியோருக்கு 4 கிராம் தங்க நாணமும் பரிசாக கிடைத்தது.முதல் 10 இடங்களை பிடித்த 7 மாணவர் மற்றும் 7 மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற 3 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கும் ‘ஹாட் பாக்ஸ்’ மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவற்றை அமைச்சர்கள் மற்றும் மேயர் வழங்கினார்கள்.இந்த பந்தயத்தை மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் நேரில் கண்டு மகிழ்ந்தனர்.

பரிசு பெற்ற மாணவ, மாணவிகள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகள்