முக்கிய செய்திகள்:
அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை:பொதுமக்கள் பாராட்டு

அம்மா உணவகத்தில் காலையில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், கறிவேப்பிலை சாதம் அல்லது எலுமிச்சை சாதம், தயிர்சாதம் ஆகியவை மிகமலிவான விலையில் தரமாக வழங்கப்பட்டு வருகிறது. ‘அம்மா' உணவகங்களில் மாலை நேர உணவாக ரூ.3-க்கு, 2 சப்பாத்திகளும், பருப்பு கடைசலும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் சப்பாத்திகள் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். ஒரு சப்பாத்தி 6 அங்குலம் அளவும், 30 கிராம் எடையும் இருக்கும். அதனுடன் 40 மில்லி கிராம் பருப்பு கடைசல் வழங்கப்படுகிறது.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சப்பாத்திகள் கிடைக்கும். மற்ற உணவுகளை போலவே சப்பாத்திகளும் பார்சல் வழங்கப்படாது. முதற்கட்டமாக ஒருநாளைக்கு ஒரு உணவகத்துக்கு 2 ஆயிரம் சப்பாத்திகள் வீதம் 200 உணவகங்களுக்கு 4 லட்சம் சப்பாத்திகள் தயார் செய்து வழங்கப்படுகிறது.இதற்காக 25 கிலோ கோதுமை மாவு நவீன எந்திரம் மூலம் 15 நிமிடங்களில் பிசையப்படுகிறது. ஒரு கிலோ கோதுமை மாவில் 40 சப்பாத்திகள் வீதம், ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்திகள் நவீன எந்திரம் மூலம் தயார் செய்யப்படுகிறது.

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் திறக்கப்பட்ட ‘அம்மா' உணவகத்தில், நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் மலிவான விலையில் வயிறாற உணவருந்தி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மனதார பாராட்டினார்கள்.அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பல்வேறு சத்துகள் உள்ளன. கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்திகள் அம்மா உணவகங்களில் மிகமலிவான விலையில் கிடைப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

 

மேலும் செய்திகள்