முக்கிய செய்திகள்:
மயிலாப்பூர் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:,

மயிலாப்பூர் உதவி ஆணையாளர் அலுவலகத்தில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிய குடும்ப அட்டை வழங்கக்கோரியும், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கென மனு செய்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.அவர்களது வேண்டுகோள் மீது உடனடியாக தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். புதிய குடும்ப அட்டை கோரி மனு செய்தவர்களுக்கு, 60 நாட்களுக்குள் உரிய ஆய்வுக்குப்பின் தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டுமென்றும், மனுக்களை நிராகரிக்கும் பொழுது அதன் விவரம் மனுதாரர்களுக்கு தாமதமின்றி தெரியப்படுத்த வேண்டுமென்றும் அமைச்சர் அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்.

மேலும் அமைச்சர் கூறியதாவது:

இன்று வரை புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த 8,82,740 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதியும், நுகர்வோரின் குறைகளைக் களைய சென்னை மாநகரில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக் கிழமையன்றும், மாவட்டங்களில் இரண்டாம் வெள்ளிக் கிழமையன்றும் நுகர்வோர் குறைதீர் முகாம்களை அரசு நடத்தி வருகிறது. தற்பொழுது சென்னை மாநகரில் 16 உதவி ஆணையாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் சென்னை மாநகரில் மட்டும் 1723 நியாயவிலை அங்காடிகள் அவற்றில் இணைக்கப்பட்டுள்ள 21,46,627 குடும்ப அட்டை தாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் சீரான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் அனைவரும் தங்கள் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்துகொண்டு பயன்பெறும் வகையில், அம்பத்தூரில் சகல வசதிகளுடன் கூடிய மண்டல அலுவலகக் கட்டிடம் ரூபாய் 80 லட்சம் செலவிலும், ஆயிரம் விளக்கு உதவி ஆணையாளர் அலுவலகம் 89 லட்சம் ரூபாய் செலவிலும், சைதாப்பேட்டை உதவி ஆணையாளர் அலுவலகம் 53 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

 

மேலும் செய்திகள்