முக்கிய செய்திகள்:
சென்னையில் ஆதார் அட்டை எடுக்கும் பணி மார்ச் வரை நீடிப்பு

தமிழ்நாடு முழுவதும் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி கடந்த 2011–ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.அந்தந்த மாவட்ட மாநகராட்சி, மற்றும் நகராட்சி மூலம் இந்த பணி நடந்து வருகிறது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் இப்பணி 70 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. சென்னையில் தான் மிகவும் குறைவாக பணி முடிந்து உள்ளது.இதனால் சென்னையில் மட்டும் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் கணக்கெடுப்பு துறை இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் கூறியதாவது:,

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 84 லட்சத்து 12 ஆயிரத்து 729 பேர் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து உள்ளனர். இது 71.81 சதவீதம் பணியாகும். இவர்களில் 4 கோடியே 27 லட்சத்து 44 ஆயிரத்து 931 பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.

23 மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் புகைப்படம் எடுத்துள்ளனர். 8 மாவட்டங்களில் 65 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை புகைப்படம் எடுத்து உள்ளனர்.சென்னையில் 56.81 சதவீதம் பேர் மட்டுமே புகைப்படம் எடுத்துள்ளனர். அதாவது 23 லட்சத்து 59 ஆயிரத்து 896 பேர் மட்டுமே புகைப்படம் எடுத்துள்ளனர். இவர்களில் 19 லட்சத்து 10 ஆயிரத்து 378 பேருக்கு ஆதார் எண் விநியோகிக்கப்பட்டு உள்ளது. இது 80.95 சதவீதம் ஆகும்.சென்னையுடன் மாநகரின் இணைக்கப்பட்ட புறநகர் பகுதியில் இப்பணி முழுமை அடையவில்லை.இதனால் சென்னையில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்