முக்கிய செய்திகள்:
டெல்லி மேல்–சபை தேர்தல் 6 பேர் மனுக்களும் ஏற்பு

டெல்லி மேல்–சபையில் எம்.பி.க்களாக இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேரில் 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்த காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் பிப்ரவரி 7–ந்தேதி நடை பெறும் என்று மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தேர்தல் அதிகாரியாக தமிழக சட்ட சபை செயலாளர் ஜமாலுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். உதவி தேர்தல் அதிகாரியாக சட்டசபை துணை செயலாளர் வீரராஜேந்திரன் நியமிக்கப்பட்டார்.மேல்–சபைக்கு தமிழகத்தில் இருந்து புதிய எம்.பி.க் களை தேர்ந்துஎடுப்பதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 21–ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. அ.தி.மு.க. சார்பில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தயானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, அ.தி.மு.க. ஆதரவு பெற்ற மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் மனுதாக்கல் செய்தார்கள். சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் மன்னன் பத்மராஜன், வீர வன்னியர் மக்கள் இயக்க நிறுவனர் ஸ்ரீராமசந்திரன் ஆகியோரும் மனுகொடுத்தனர்.இன்று காலை 11 மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. வேட்பு மனுதாக்கல் செய்தவர்களின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர்.

அப்போது தலா 10 எம்.எல்.ஏ.க்களால் முன் மொழியப்பட்ட அ.தி.மு.க., தி.மு.க., மார்க் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டன. 2 சுயேட்சை வேட்பாளர்களை யாரும் முன்மொழியாததால் அவர்களுடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.இது குறித்து தமிழக சட்டசபை செயலாளரும் மேல்–சபை தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு, மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தல் குறித்து வரப்பெற்ற வேட்பு மனுக்கள் இன்று (புதன்கிழமை) ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்தம் 8 வேட்பாளர்களிடமிருந்து 3 மாற்று மனுக்கள் உள்பட 11 மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றுள் சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), செல்வராஜ் (அ.தி.மு.க.), திருச்சி சிவா (தி.மு.க.), முத்துகருப்பன் (அ.தி.மு.க.), ரங்கராஜன் (மார்க். கம்யூ.) விஜிலா சத்தியானந்த் (அ.தி.மு.க.) ஆகியோர் அளித்த வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவை என அறிவிக்கப்படுகிறது.பத்மராஜன், பி.என்.ஸ்ரீராமச்சந்திரன் ஆகிய 2 வேட்பாளர்கள் அளித்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்