முக்கிய செய்திகள்:
நந்தனம் கல்லூரி மாணவர்கள் கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் காயம்

நந்தனம் கல்லூரி முன் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீது மாணவர்கள் கல்வீசி மோதலில் ஈடுபட்டனர். அதில் இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார். 3 பைக்குகள் சேதம் அடைந்தது.சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடும்போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும், ஒவ்வொரு முறையும் வன்முறை ஏற்படுவதாலும் பஸ் தினம் கொண்டாட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் தடையை மீறி பஸ் தினம் கொண்டாட ஏற்பாடு செய்தனர். பஸ் மீது ஏறி நின்று அண்ணாசாலையில் வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தடுத்ததால் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதில் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஒரு மாணவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மறியலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் பிடித்துச் சென்றனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.நேற்று நடந்த சம்பவத்துக்குப் பிறகும் கல்லூரிக்கு விடுமுறை விடப்படவில்லை. மாணவர்கள் வழக்கம் போல் இன்று கல்லூரிக்கு வந்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து 4 நாட்கள் பஸ் தினம் கொண்டாட மாணவர்கள் திட்டமிட்டு இருப்பது போலீசுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரி முன் சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் குணவர்மன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

திடீரென்று கல்லூரி வளாகத்தில் இருந்த மாணவர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். தொடர்ந்து கல்லூரிக்குள் இருந்து ரோட்டில் கற்கள் பறந்து வந்து விழுந்தன.அதில் இன்ஸ்பெக்டர் குணவர்மன் மீது ஒரு கல் விழுந்து காயம் ஏற்பட்டது. அங்கு போலீசார் நிறுத்தி வைத்திருந்த மோட்டார்சைக்கிளும் சேதம் அடைந்தது. உடனே போலீசார் மாணவர்களை எச்சரித்து உள்ளே விரட்டினார்கள்.மாணவர்கள் கல்வீசிய போது ரோட்டில் சென்ற பொதுமக்கள் மீதும் வாகனங்கள் மீதும் விழுந்தது. ஆனால் சேதம் ஏதும் இல்லை.

 

மேலும் செய்திகள்