முக்கிய செய்திகள்:
சிவாஜி சிலையை அகற்ற கோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சிவாஜிகணேசன் சிலையை அகற்ற கோரி பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது,சென்னை மெரினா கடற்கரை எதிரே காமராஜர் சாலை, டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை 2006–ல் தமிழக அரசு நிறுவியது.

இந்த சிலை சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சிவாஜி சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் சதீஷ்குமார், அக்னிகோத்ரி, சசீதரன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது சென்னை போக்குவரத்து போலீஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் காமராஜர் சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை இருப்பதால் அந்த இடத்தில் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. எதிரே வரும் வாகனங்களை இந்த சிலை மறைக்கிறது.

வாகனத்தில் செல்வோருக்கு இதனால் இடையூறு ஏற்படுகிறது. எனவே இந்த வழக்கில் தகுந்த உத்தரவை கோர்ட்டு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன், சங்கத்தமிழ் பலகை, தமிழ் பித்தன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்று வற்புறுத்தப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு

நடிகர் சிவாஜிகணேசன் சிலை இரு முக்கிய சாலைகளுக்கு நடுவில் வைக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக போலீஸ் தரப்பிலும் மனுதாரர் தரப்பிலும் கூறப்பட்டு உள்ளது.

போக்குவரத்து போலீஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிலை உள்ள பகுதியில் நடந்த விபத்துக்களின் புள்ளி விவரங்களை கூறி உள்ளனர். எனவே பொது நலன் கருதி காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் அமைந்துள்ள சிவாஜிகணேசன் சிலையை அகற்ற வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளலாம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

 

மேலும் செய்திகள்