முக்கிய செய்திகள்:
வடசென்னையில் பொங்கல் பரிசு–நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ஆர்.கே.நகர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே.சேகர்பாபு 2014 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொங்கல் பரிசு வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி தண்டையார்பேட்டை கேப்டன் மகாலில் இன்று காலை நடைபெற்றது.இதையொட்டி அங்கு பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் குலை உள்பட பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களை வைத்து மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 2014 பெண்களுக்கும் சேலை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பையை வழங்கினார்.தையல் பயிற்சி முடித்த 140 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், ரூ. 27 ஆயிரம் வீதம் 10 பெண்களுக்கு திருமண உதவி, அழகுக்கலை பயிற்சி முடித்த 100 பெண்களுக்கு அழகு சாதன பொருட்கள் மற்றும் நாற்காலிகள், ரத்த தானம் செய்த 61 பேருக்கு கைக்கடிகாரம், கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த 10 பேருக்கு கம்ப்யூட்டர், சுய உதவி குழு பெண்களுக்கு பண உதவி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,ஆர்.கே.நகர் தொகுதியில் பி.கே.சேகர்பாபு அடிக்கடி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 15 ஆயிரத்து 94 பேர் நலத்திட்ட உதவிகள் மூலம் பயனடைந்துள்ளனர். இது எனக்கு பெருமை சேர்க்க அல்ல. கலைஞருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கடமையாற்றுகிறார்.

நலத்திட்ட உதவி மட்டுமின்றி பெண்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள், கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்பட நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். அவரால்தான் நீங்கள் அனைவரும் பெருந்திரளாக வந்திருக்கிறீர்கள்.

பெண்களுக்குத்தான் நாட்டு நடப்பு அதிகம் தெரியும். ஏனென்றால் அவர்கள்தான் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குகிறார்கள். எந்த பொருளாக இருந்தாலும் சரி காய்கறி முதல் கருவாடு வரை அனைத்தையும் பேரம் பேசி நல்ல பொருளா என்று பார்த்துதான் வாங்குகிறார்கள்.வீட்டுக்கு வாங்கும் பொருட்களை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வாங்கும் பெண்கள் நாட்டு நடப்பை பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நினைத்தால் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வர முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

 

மேலும் செய்திகள்