முக்கிய செய்திகள்:
கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில், மகாதீபம் ஏற்றப்பட்டது : லட்சக்கணக்கான மக்கள் தரிசனம்

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் நேற்று மாலை ஏற்றப்பட்டது. கோயிலின் அருகே உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் பிரமாண்ட கொப்பரையில் ஏற்றப்பட்ட மகாதீபத்தை லட்சக்கணக்கானோர், பக்தி பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் பக்தர்களின் வசதிக்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான், மலை வடிவில் ஜோதிப் பிழம்பாக உருவானதைக் குறிப்பதே​திருவண்ணாமலை​என்று அறியப்படுகிறது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு தீபத் திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினந்தோறும் பல்வேறு ரதங்களில் அருணாச்சலேஸ்வரர், உண்ணாமலையம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள், கோயிலைச் சுற்றிலும் உள்ள ரதவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், நேற்று அதிகாலை, கோயிலில் உள்ள பிரதோஷ நந்தி முன்னிலையில் ஏற்றப்பட்டது. அதிகாலை 2 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றன. பிரதோஷ நந்தியின் வலப்புறம் உள்ள மகா மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை வழிபட்டனர்.

அதிகாலையில் 5 மடக்குகளாக ஏற்றப்பட்ட இந்த பரணி தீபம் மாலை 5.30 மணியளவில் தீப தரிசன மண்டபத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்டன. பின்னர், மாலை 6 மணியளவில் சுவாமி சன்னதியின் பின்புறத்திலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு, தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அர்த்தநாரீஸ்வரருக்கும், ஏற்கெனவே எழுந்தருளியிருந்த பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பரணி தீபத்தின் 5 மடக்குகள் மூங்கில் தட்டில் வைக்கப்பட்டு பிரகாரத்தில் வலம் வந்து, அருணாச்சலேஸ்வரர் சன்னதியின் முன்பு உள்ள கொடிமரம் அருகே அகண்ட தீபத்தில் சேர்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோயிலின் வைகுண்ட வாசல் வழியாக மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான சமிக்ஞை தெரிவிக்கப்பட்டு, 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் தயாராக வைக்கப்பட்டிருந்த 6 அடி உயர கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோயிலுக்கு உள்ளும், வெளியிலும், கிரிவலப் பாதை மற்றும் பல்வேறு பகுதிகளிலும் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "சிவாய நம" கோஷம் எழுப்பி பக்திப்பரவசத்துடன் வழிபட்டனர்.

தீபத் திருவிழாவில் பங்கேற்று அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்காக தமிழகம் மற்றும் பிறமாநிலங்களிலிருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இருந்தும் திருவண்ணாமலைக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையிலிருந்து 450 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, 9 சாலைகளிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் நடமாடும் கழிவறைகள், மின்விளக்கு வசதி போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. கிரிவலம் வரும் பக்தர்களுக்காக கிரிவலப் பாதையில் 14 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. திருவண்ணாமலை மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பிறகோயில்களில் தீபம்

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும், பல்வேறு கோயில்களில், திருக்கார்த்திகைத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆலய வாசல்களில், பனைமர ஓலைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவற்றில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில் உள்ள புகழ்பெற்ற சிங்காரவேலர் ஆலயத்தில் திருக்கார்த்திகைத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை மண்டபத்திற்கு எழுந்தருளிய சிங்காரவேலருக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர், விபூதி ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதனையடுத்து, நேற்றிரவு ஆலய வாசலில் பனைமர ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சிங்காரவேலரை வழிபட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பனேஸ்வரர் திருக்கோயில், அய்யர்மலை ரத்னகிரீஸ்வரர் திருக்கோயில், கரூர் வஞ்சலீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட, மாவட்டத்தின் அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. வீடுகளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, பெண்கள் வழிபட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில், 108 கிலோ நெய் ஊற்றப்பட்ட அகண்ட மண்டபத்தில் மகாகார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரவில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. போடிநாயக்கனூரில் மலைமேல் உள்ள பரமசிவம் கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமாக விளங்கும் திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்முகேஸ்வரர் ஆலயத்தில், சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, வழிபாடு செய்தனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு தலைசோலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற தீபத் திருவிழாவில் அண்ணாமலையாரின் கருவறையில் இருந்து கொண்டுவரப்பட்ட தீபஜோதி, பஞ்சாசன கோபுரத்தில் வைக்கப்பட்டு, மகாதீபம் ஏற்றப்பட்டது.

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கார்த்திகைதீபத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஏராளமானோர் ஆலய வளாகத்தில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி, இறைவனை வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ஊத்தங்கரை, பர்கூர், தளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் மகாதீபம் ஏற்றப்பட்டு, சிவபெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

நாகப்பட்டினம் மாவட்டம் நீலாயதாட்சியம்மன் ஆலயத்தில் திருக்கார்த்திகையை முன்னிட்டு, லட்சதீப நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல், நாகை நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயத்தில் சொக்கப்பனை ஏற்றி, வழிபாடு நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் ஆலயத்தில் நேற்றிரவு தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும் செய்திகள்